பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு பிறகு தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும், திமுகவின் கரை வேட்டி கட்ட தயாராக இருப்பதாகவும் பேசியிருந்தார்.
அரசகுமாரின் பேச்சு தமிழக பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தமிழக பாஜக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அரசகுமாரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பல நிர்வாகிகளும் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்தது.
என் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில தலைமைக்கு இல்லை என்று கூறிய அரச குமார், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார்.
அரச குமார் திமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இன்று அரசகுமார் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரச குமார் கூறுகையில்,
- ஸ்டாலின் குறித்து பேசியதற்காக என் வாழ்நாளில் கேட்கக்கூடாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை எதிர்கொண்டேன்.
- மனம் சோர்ந்து இருந்த நேரத்தில், திமுகவில் இணைந்துள்ளேன்.
- இன்னும் சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்.
- அதற்கு நான் உழைப்பேன்.
- பாஜக தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை.
- தாயகத்திற்கு திரும்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.