கடன் வட்டியில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி

குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15% ஆகவே நீடிக்கும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக் கொள்கைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

கடந்த 5 முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டங்களில் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இன்று ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று நிதி கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே 5 முறை ரெப்போ வட்டி விகிதமானது தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 1.60% அளவுக்கு ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

இந்த வட்டி விகிதக் குறைப்பு காரணமாக, வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் வங்கிகள் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

எனவே முதலில் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் குறைப்பின் பலன் பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் எதிரொலியாக, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சுமார் பத்தாண்டுகளில் இல்லாத அளவில் தொடர்ச்சியாக 5 முறை ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்து வந்த ரிசர்வ் வங்கி இந்த முறை ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.

ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதி கொள்கை குழுவில் ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் ரெப்போ வட்டி 5.15 சதவீதமாக நீடிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே