வங்கி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பை மாநில அரசுகள் ஏற்படுத்திக்கொடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம், சூரத்தில் கடந்த மாதம் கனரா வங்கிக்குள் புகுந்த காவலர் அங்கிருந்த பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் குஜராத், மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பணியாற்றும் வங்கி ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், அதுபோன்ற நடவடிக்கைகள் வங்கி ஊழியர்களை ஊக்கமுடன் பணியாற்ற உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.