ஓ.பி.எஸ். அமெரிக்கா பயணம்

பத்து நாள் பயணமாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்கு நாளை புறப்படுகிறார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறவும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதியை உலக வங்கியிடமிருந்து பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பத்து நாள் பயணமாக அமெரிக்காவுக்கு நாளை புறப்படுகிறார்.

இதுதொடர்பாக துணை முதலமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் இருந்து நாளை அதிகாலை புறப்படும் பன்னீர்செல்வம் நேராகச் சிகாகோ சென்று அங்கு ஒன்பதாம் தேதி மாலையில் சிகாகோ தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்று தெரிவித்துள்ளது.

10ஆம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கிவாலி அரசின் சார்பில் நடத்தப்படும் உலக சமூக ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது பன்னீர்செல்வத்துக்கு இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான வளரும் நட்சத்திரம் விருது வழங்கப்படுகிறது.

சிகாகோ நகர மேயர், இல்லினாய்ஸ்ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்களை பன்னிரண்டாம் தேதி சந்திக்கவுள்ளார்.

13-ஆம் தேதி வாஷிங்டன் டிசி-க்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வம், ஹூஸ்டன் நகருக்கு 14ஆம் தேதி சென்று தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

16ஆம் தேதி நியூயார்க் சென்று இந்திய-அமெரிக்க சமூகத்தினர் மற்றும் தமிழ் சங்கம் சார்பில் ஆன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின் போது தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அலுவலர்கள் உடன் விவாதிக்க உள்ளார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்டுவது குறித்து சர்வதேச நிதிக் கழகம் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திப்பார் என்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்ந்த பணிகளை பார்வையிடுவார் என்றும் துணை முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இறுதியாக தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு 17ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே