உள்ளூர் பொருட்களை வாங்க உறுதிமொழி எடுங்கள் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும்; இளைய தலைமுறையினர் மீது இந்தியா பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக பொது மக்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு முறையாக பதில் அளிக்கவில்லை என்றால் இளைஞர்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்றும்; தைரியமாக கேள்விகளை தொடுப்பதாகவும்; இது சிறப்பானதாக நாம் நினைப்பதாகவும் மோடி பாராட்டி உள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைய தலைமுறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு இளைஞர்களுக்கானது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

2022ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் குறைந்தபட்சம் உள்ளூர் பொருட்களை வாங்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசப்பக்தி உணர்வும், ஆன்மீக விழிப்புணர்வும் ஒருசேர பெற நினைப்பவர்கள் கன்னியாகுமரி போன்ற நாட்டில் உள்ள பல இடங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும், பொங்கல் பண்டிகையின் இறுதி நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே