பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழும தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஆனதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் இல்லம், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்லம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்கள் என சென்னை, மதுரை உள்ளிட்ட 38 இடங்களில் கடந்த 5-ஆம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

4 நாட்கள் நடைபெற்ற சோதனையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய், அன்பு செழியன் ஏ.ஜி.எஸ் குழும நிர்வாகிகள் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஏ.ஜி.எஸ். என்ட்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் தனது ஆடிட்டருடன் நேரில் ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அர்ச்சனா கல்பாத்தி முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்ற பின் ஏஜிஎஸ் தயாரித்த முதல் படம் பிகில் என்பதால் அதன் அனைத்து விவகாரங்களையும் அவரே கவனித்து வந்துள்ளார்.

மேலும் பிகில் பட வசூல் தொடர்பாக அர்ச்சனா கல்பாத்தி கடந்த மாதம் 29-ஆம் தேதி ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் பிகில் தான் அதிக வசூல் செய்த படம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே கடந்த வாரம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வழங்கப்பட்ட ஊதியம், படத்திற்கான செலவுகள் தொடர்பான தரவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

அதை வைத்தே இன்றைய விசாரணையில் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

தனது ஆடிட்டருடன் ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி அதற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே