மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாஸ்டேக் முறை வரவேற்கத்தக்கது என்றாலும் அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை தவிர்த்தல், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்டவைக்காக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இத்திட்டம் நாளை மறுநாள் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நிலையில், இதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த இடத்தில் ஓட்டுவது என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும், இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர் லாரி ஓட்டுநர்கள்.

பாஸ்டேக் அட்டை, வாகனங்களில் ஒட்டப்பட்டு இருந்தாலும் சில நேரங்களில் அவை வேலை செய்வது கிடையாது எனவும்;

சுங்கச்சாவடி ஊழியர்கள் ஸ்கேன் செய்தும் அவை பதிவாகுவது கிடையாது எனவும் ஓட்டுநர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அம்பத்தூர், ஸ்ரீபெரும்புத்தூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, போரூர் சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற பிரச்சனை உள்ளதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர் இஸ்மாயில் பேசுகையில், பாஸ்டேக் முறைக்கு பெரும்பாலான வாகனங்கள் மாறினாலும் போக்குவரத்து நெரிசல் அப்படியேதான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை மத்திய அரசும், சுங்கச்சாவடி ஊழியர்களும் சரிசெய்தால் மட்டுமே பாஸ்டேக் திட்டம் வெற்றி பெறும் என்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே