நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டிய மருத்துவமனையில் இதுவரை 10 நச்சுள்ள பாம்புகள் பிடிபட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வந்தது.
இந்த படத்தின் சில காட்சிகள் ஜோதிகா குறிப்பிட்ட தஞ்சாவூர் இராசமிராசுதார் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஜோதிகா மருத்துவமனையின் பராமரிப்பு நிலையை எண்ணி வேதனையடைந்துடன், தான் பார்த்தவற்றை சொல்ல முடியாது.
எனவே உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மனமில்லாமல் திரும்பி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கோயிலுக்காக கொடுக்கும் பணத்தை பள்ளிக் கூடம், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்றும் ஜோதிகா கூறியிருந்தார்.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .
ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா தனது மனைவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஜோதிகாவின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ராசா மிராசுதார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனை வளாகத்தில் புதர் மண்டியிருக்கும் பகுதிகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தனர்.
அப்போது அப்பகுதியில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட 10 பாம்புகள் பிடிபட்டன.
மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை பாம்பு கடித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வளாகம் முழுதும் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் அதிகளவில் அங்கு அலைந்து கொண்டிருப்பது ஊழியர்களை மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிரசவித்த பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நூற்றுக்கணக்கானோரை அச்சமடைய வைத்துள்ளதாகவும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், ”இந்த மருத்துவமனையில் மகப்பேறுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாலும், சிறந்த சிகிச்சையளிக்கபடுவதாலும் தஞ்சையை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர்.
இந்த வளாகத்திற்குள் எங்கு பார்த்தாலும் புதர்கள் மண்டி காடுகள் போல் காட்சியளிக்கிறது. அத்துடன் பழமையான மருத்துவமனை என்பதாலும் பயன்படுத்தபடாத சில கட்டடங்களும் உள்ளன.
இதனால் பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.
இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் பாம்புகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து கர்பிணி பெண்கள் அச்சப்பட்டு அலறியுள்ளனர்.
ஊழியர்களும் இது குறித்து நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம்.
ஆனால் புதர்களையும், பாம்புகளையும் அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் நிரந்தர பணியாளரான செல்வி (வயது 45) என்பவர் தூய்மை பணியாளராக இருந்து வருகிறார்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான அரசு கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு செல்வி அறைக்கு திரும்பி கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
இதையடுத்து அலறிதுடித்த அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பாம்பு கடித்த கால் வீங்கியுள்ள நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது இந்த செய்தியை கேட்ட அனைவரும் ஒரு வித அச்சத்துடனேயே நடமாடிகொண்டிருக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் அறைக்குள்ளே பாம்பு புகுந்து விடுகிறது.
இங்கு வரும் பாம்பு குழந்தை பிரசவித்த தாய்மார்கள் தங்கியுள்ள வார்டுகளில் புகுந்து விட்டால் அவர்களின் நிலைமை என்னவாகும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு இரவு நேரத்தில் செல்லும் போது பாம்பு கடிப்பதற்கான அபாயம் உள்ளது.” என்றனர்.