விடுப்பு அளிப்பதில் பிரச்னை; மூத்த உதவி ஆய்வாளரை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் விடுமுறை எடுப்பது தொடர்பான தகராறில் கான்ஸ்டபிள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் புடவுன் நகரப் பகுதியில் உஜானி காவல் காவல்நிலையம் அமைந்துள்ளது.

இந்த காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவரும் லலித் குமாருக்கும் அதே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராம் அவுதார் என்பவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கான்ஸ்டபிள் லலித் குமார் விடுப்புக்காக காவல் ஆய்வாளரிடன் விண்ணப்பித்துள்ளார். 

ஆனால் அந்த சமயத்தில் காவல் ஆய்வாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஆய்வாளரின் பணிகளை உதவி ஆய்வாளர் ராம் அவுதார் மேற்கொண்டு வந்துள்ளார்.

அப்போது உதவி ஆய்வாளரிடன் விடுப்பு வழங்குமாறு லலித் குமார் கேட்டுள்ளார்.

ஆனால் விடுப்பை காவல் ஆய்வாளரிடம் வாங்கிக்கொள்ளுமாறு ராம் அவுதார் கூறியுள்ளார்.

இதனை தொடந்து விடுப்புக்காக காத்திருந்த லலித் குமார் கொரோனாவில் குணமடைந்து திரும்பிய ஆய்வாளரிடம் விடுப்புக்கோரி விண்ணப்பித்துள்ளார்.

அவரும் கான்ஸ்டபிள் லலித் குமாருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். அந்த நேரத்தில் காவல்துறை ஆய்வாளரிடம் சென்ற உதவி ஆய்வாளர் ராம் அவுதார், அவரிடம் ஏதோ கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கான்ஸ்டபிள் லலித் குமாரின் விடுப்பை காவல்துறை ஆய்வாளர் ரத்து செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் லலித் குமார், விடுப்பு பரிபோனதுக்கு காரணமான உதவி ஆய்வாளர் ராம் அவுதாரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உதவி ஆய்வாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சண்டையில் கான்ஸ்டபிள் லலித் குமாருக்கும் காயம் ஏற்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக உஜானி காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே