நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும்.
இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது.
இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
உலக முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் இவ்விழாவின்போது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி கொண்டாடுவார்கள்.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கிறிஸ்துவ மக்கள் வீட்டில் இருந்தபடியே ஈஸ்டர் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், கிறிஸ்துவ மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் சிறப்பு நிகழ்வில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஏழைகளின் நலனுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான எண்ணங்களை நாம் நினைவில் கொள்வோம்.
கொரோனாவை வென்று புதிய சுகாதாரமான உலகம் உருவாக ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.