பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்-க்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார்.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

60 சென்ட் நிலத்தில் மணிமண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா்.

தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசுகிறார்.

இதற்காக முதல்வர் பழனிச்சாமி நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து தனியாா் விடுதிக்குச் செல்கிறார்.

அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவைத் திறந்து வைத்துப் பாா்வையிடுகிறாா்.

பின்னர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணப்படுகிறார். அங்கு மணிமண்டபத்தைத் திறந்துவைத்துப் பேசுகிறார்.

திருச்செந்தூர் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே