TIKTOK மோகம்: புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவர் கைது

டிக் டாக் செயலி மீது மோகம் கொண்ட கண்ணன், சாலையில் செல்லும் பொதுமக்களை மறித்து, அவர்களை அச்சுறுத்துவது மட்டுமன்றி, அவர்களின் முன்பு நடனமாடி அதை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்துவந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். கல்லூரி மாணவர். 

இவர் சாலையில் நடந்துவரும் பொதுமக்களை நோக்கி ஓடிச் சென்று நடனமாடுவது, முதியவர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்வது, அத்துமீறிச் செயல்படுவது என இவரின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவரின் டிக் டாக் அத்துமீறல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பொதுமக்களை அச்சுறுத்தி, முகம் சுளிக்க வைப்பது போன்ற இவரின் டிக் டாக் பதிவுக்கு டிக் டாக் பிரியர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை டிக் டாக்கில் தெரிவித்திருந்தனர்.

ஐயா பொது ஜனங்களே இந்த டிக் டாக் மனநோயாளியை நீங்களாவது நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் சேருங்கள் என்றெல்லாம் சில டிக் டாக் பிரியர்கள் கண்ணனை டேக் செய்து பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், டிக் டாக் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதுபற்றித் தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.

இதையடுத்து, வடகாடு போலீஸார் கல்லூரி மாணவர் கண்ணனைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கண்ணன் செயல்பட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இதுபோன்று டிக் டாக் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்துவது, தொந்தரவு செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாருக்குத் தெரியப்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் உறுதியாக.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே