புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!!

புயல் தொடர்பாக அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி, இலங்கையில் நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,

புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த வழிகாட்டுதல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

புயல் நிலையை கண்காணிக்க 24 மணி நேரம் கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது.

தென் மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் எனது தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே