தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை.

சென்னை, கோவை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அரியலூர், திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் ராயப்பேட்டை, அசோக்நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஐஸ் அவுஸ், அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியது.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, பரவை ,வடக்குபொய்கைநல்லூர், காரைநகர், பூவைத்தேடி, செருதூர் ,பாப்பாகோவில் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே வேளாங்கண்ணியில் பெய்த தொடர் மழையால், குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செல்லம்பட்டி கருமாத்தூர், உத்தப்பநாயக்கனூர், எழுமலை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் வயல்களில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் விளமல், காட்டூர், புலிவலம், அடியக்கமங்கலம், சேத்தமங்கலம், மாங்குடி மற்றும் நன்னிலம், திருத்துறைப்பூண்டி ,குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. காலையிலும் மழை நீடித்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோவை

கோவை மாவட்டம் காந்திபுரம், ரயில்நிலையம், பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், விமானநிலையம், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குடி,கந்தர்வகோட்டை, திருமயம், அறந்தாங்கி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி விடுமுறை அறிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சியில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சந்திப்பு, மேலப்புதூர், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மணப்பாறை, லால்குடி, மணச்சநல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைபெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை நீடிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம், கோட்டைகாடு கிராமங்களை இணைக்கும் தற்காலிக தரைபாலத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தரைப்பாலம் மழையால் இரு முறை உடைந்து சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், புதிய மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.

தமிழகத்தில் இன்று இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பரப்பிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, கடலூரில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூரை அடுத்த கம்பியும்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார்.

நேற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக இவரது வீடு திடீரென இடிந்து விழுந்த து. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கனமழை நீடிப்பதால் அரியலூர்- திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே