பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தினமும் 15 நிமிடம் ஒதுக்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும்; சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
‘கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தினமும் 15 நிமிடம் ஒதுக்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு வழக்கறிஞர் கண்ணன், பொதிகையில் டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு 15 நிமிடம் ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக் கோரி முறையிட்டார்.
மேலும் தமிழ் மொழி நிகழ்ச்சிக்காக தொடங்கப்பட்ட பொதிகை டி.வி.யில் மற்ற இடம் பெறுவதில்லை என்பதையும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதனை கேட்ட நீதிபதிகள் அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த முறையீடு மனுவாக தாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.