சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் சூரரைப் போற்று இல்லை.
சூர்யாவின் அபார நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூரரைப் போற்று படம் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.
ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்கிற பெயரில் படமாக எடுத்தார் சுதா கொங்கரா. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருந்ததால் படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். படத்தை பார்த்த அனைவரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டினார்கள். அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை எல்லாம் தியேட்டரில் அல்லவா வெளியிட்டிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
சூரரைப் போற்று ஆஸ்கர் ரேஸில் பங்கேற்றது. பொதுப் பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பிரிவுகளில் சூரரைப் போற்று போட்டியிட்டது. இறுதி தகுதிப் பட்டியலை ஆஸ்கர் குழு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்டது. அதில் சூரரைப் போற்று உள்பட 366 படங்களின் பெயர்கள் இருந்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று இடம்பிடித்தது.
ஆஸ்கர் ரேஸில் சூரரைப் போற்று முந்திக் கொண்டிருந்ததை பார்த்த படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இறுதி நாமினேஷன் பட்டியலை பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரின் கணவர் நிக் ஜோனஸும் வெளியிட்டனர். அந்த பட்டியலில் சூரரைப் போற்று படத்தின் பெயர் இல்லை. ஆஸ்கர் ரேஸில் இருந்து சூரரைப் போற்று வெளியேற்றப்பட்டாலும் நாமினேட் செய்யப்பட்டதை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடக்கவிருக்கிறது