பிகில் பட வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

பிகில் திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி உதவி இயக்குனர் கே.பி.செல்வா தொடுத்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கூறி கே.பி.செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பிகில் படத்தின் கதையை கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாகவும், செல்வா அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளதாகவும் அட்லி தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விளம்பரத்திற்காகவும், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும், பணம் பறிக்கும் நோக்கத்திற்காகவும் தான் தொடரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே செல்வா வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும், அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அட்லி தரப்பினர் தெரிவித்தனர்.

பணத்திற்காக வழக்கு தொடரப்பட வில்லை என்றும் கால்பந்து ஆட்டத்தை முன்வைத்தே தனது கதையும் எழுதப்பட்டதாகும் செல்வா தரப்பு வாதமிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் செல்வா மனுவை வாபஸ் பெற்றது எப்படி?? என கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே