பொன்மகள் வந்தாள் – பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய படம்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், OTT தளமான அமேசானில் இந்தப்படம் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி இந்தப்படம் நேற்றிரவு ரிலீஸ் ஆகியுள்ளது.

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றியதே படத்தின் மையக்கதை.

பெண்கள் தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியே சொல்ல முன்வரமாட்டார்கள் என்ற பொது சிந்தனையை பாதுகாப்பு வளையமாகக் கொண்டு தப்பிக்கும் கிரிமினல்களின் முகத்திரையை கிழிக்க, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வர வேண்டும் என்ற கருத்துடன் படக்கதை வடிவகைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 5 குழந்தைகளை கடத்திக் கொன்றதாக ஜோதி என்ற பெண் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படுவதாக படம் தொடங்குகிறது.

பின்னர், பெத்துராஜ் ஆக வரும் பாக்யராஜ்ஜின் மகள், வெண்பா (ஜோதிகா) இந்த என்கவுண்டர் பொய் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உண்டாகிறது.

வில்லனாக வரும் தியாகராஜன், அவருக்காக வாதாடும் பார்த்திபன் ஆகியோரின் சூழ்ச்சிகளை வீழ்த்தி, போலீசார் & தியாகராஜன் இணைந்து சித்தரித்த ஜோதி என்கவுண்டர் வழக்கில், எப்படி வென்று ஜோதி நிரபராதி என்பதை நிரூபிக்கிறார் என்பது மீதிக்கதை.

பொதுவாகவே நீதிமன்ற வழக்குகள் தொடர்பான படங்களில், ஹீரோ / ஹீரோயின் தரப்பு வெற்றி பெறும் என்பது எளிதாக கணிக்கக் கூடியது.

படத்தின் தொடக்கத்திலேயே, தியாகராஜனுக்கும், குழந்தைகள் கொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சாதாரணமாகவே ஊகிக்க முடிகிறது.

வெண்பாவாக வரும், ஜோதிகாதான் வெற்றி பெறுவார் என்று கிளைமேக்ஸை எளிதாக கணிக்க முடிந்தாலும், இடையே உள்ள திரைக்கதைதான் பார்வையாளர்களை கட்டிப்போட்டிருக்க வேண்டும்.

ஆனால், திரைக்கதையில் அப்படி ஒரு மேஜிக் நடக்கவில்லை. வழக்கமான பழிவாங்கல் கதை போலவே நகர்கிறது.

வெண்பா, ஜோதி என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சில காட்சிகளில் மட்டுமே ஈர்க்கிறார்.

குறிப்பாக, கொல்லப்பட்ட ஜோதியின் மகள் நான் தான் என்று உண்மையை உடைக்கும் சீன், நீதிமன்றத்தில் தியாகராஜனை தூண்டிவிட்டு, அவரின் வாயாலே உண்மையை வெளிக்கொண்டுவரும் சீன் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன.

அதேபோல, கடத்தப்பட்ட தனது மகளை ஜோதி மீட்கும் சீனிலும், ஜோதிகா மிளிர்கிறார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞராக வரும் பார்த்திபன், தனக்கே உரிய நக்கல் பாணியில் நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

ஜோதியின் உண்மையான மகள் வெண்பா இல்லை என்ற உண்மை பார்த்திபனுக்கு தெரிந்த போதும், அதை நீதிமன்றத்தில் முன்வைத்து, தியாகராஜனை காப்பாற்றாத சீன் மட்டுமே படத்தில் எதிர்பாராத திருப்பம்.

பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.

”அவமானம்னு நாம மறைக்குற சின்ன உண்மைல கூட எத்தனையோ கெட்டவங்க நல்லவங்க ஆயிடுறாங்க” போன்ற சில வசனங்கள் சுளீர் ரகம்.

பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, ஆண்களிடம் பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மெசேஜ் தற்போதைய காலத்திற்கு முக்கியமானதாக கருதலாம்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே