3-வது நாளாக அன்புச்செழியனின் வீடுகளில் தொடரும் சோதனை!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் மதுரை, சென்னை வீடுகளில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம், அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு தொடர்புள்ள 38 இடங்களில் வருமானவரித்துறை நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினர்.

புதன் காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து நடந்துவருகிறது.

பிகில் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 300 கோடி என்பது உண்மையான கணக்கா என்பதை சரி பார்க்கும் நோக்கத்துடனேயே இச்சோதனையை தொடங்கியதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 18 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி ரூபாய் ரொக்கத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலிருந்து ஏராளமான சொத்து பத்திரங்கள், அடமான ஆவணங்கள், முன் தேதியிட்ட காசோலைகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு 300 கோடி ரூபாயை தாண்டும் என்றும், இவற்றை அன்புச்செழியன் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளதையும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.

பிகில் படத்தை வாங்கி வினியோகித்த ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் உரிமையாளர்கள், ரகசிய இடங்களில் மறைத்துவைத்திருந்த ஏராளமான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தொடர்புடைய 12 இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வரவு செலவு ஆவணங்களை ஆய்வு செய்துவருவதாக வருமானவரித்துறை கூறியுள்ளது

பிகில் படத்தில் நடித்த விஜய் உள்ளிட்ட நடிகர்-நடிகைகளுக்கு ஏஜிஎஸ் சினிமாஸ் சம்பளம் வழங்கிய ஆவணங்களையும் கைப்பற்றி வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிகில் படத்தில் நடித்ததிற்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் நடிகர் விஜய், அந்த ரொக்கத்தை அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது குறித்து விசாரித்து வருவதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஆனால், நடிகர் விஜயிடம் இருந்தோ, அவரது வீடுகளிலிருந்தோ ரொக்கம், அல்லது ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்படவில்லை.

நெய்வேலி அருகே, மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் விஜயை சென்னைக்கு அழைத்துவந்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக அன்புச்செழியனின் மதுரை, சென்னை வீடுகளில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே