ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணத்தை செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்!

புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையை மத்திய அரசு உணரவில்லை என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) விமரிசித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ‘உரக்கப் பேசுவோம்’ என்ற பிரசாரத்தின் அங்கமாக காணொலிக் காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“இந்தியாவின் குரலை எழுப்புவதற்காக இப்படியொரு பிரசாரத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அரசு, கருவூலத்திலுள்ள பணத்தை எடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

6 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக ரூ. 7,500-ஐ மாதந்தோறும் வழங்கிட வேண்டும். உடனடியாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு செல்ல பாதுகாப்பான மற்றும் இலவச பயண வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்களுக்கு தினசரி உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்துத் தர வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் அவர்களது கிராமங்களிலேயே 200 நாள்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்குப் பதிலாக நிதியுதவி செய்தால், பல கோடி வேலையிழப்புகளைத் தடுக்க முடியும்.

இதன் மூலம் நாடும் வளர்ச்சியடையும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நாட்டு மக்கள் அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.

இந்த இக்கட்டான சூழலிருந்து நம்மால் நிச்சயம் வெற்றி கண்டு மீண்டு வர முடியும்.

சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பசியுடனும், தாகத்துடனும், மருந்துகள் இல்லாமல் வெறும் கால்களில் நடந்தே செல்லும் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையை ஒவ்வொரும் பார்த்தோம்.

நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அவர்களது வலியையும், அவல நிலையையும் பார்த்தனர். ஆனால், அரசு மட்டும் அதைப் பார்க்கவில்லை.

இது காயத்துக்கு மருந்துபோடும் நேரம் என முதல் நாளிலிருந்தே எனது அனைத்து காங்கிரஸ் நண்பர்களும், பொருளாதார நிபுணர்களும், சமூகவியலாளர்களும் திரும்பத் திரும்ப தெரிவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களோ அல்லது விவசாயிகளோ, தொழில் நிறுவனமோ அல்லது சிறிய கடை உரிமையாளர்களோ, இந்த அரசு அனைவருக்கும் உதவ வேண்டும்.

இதைப் புரிந்துகொண்டு செயல்படுத்த அரசு மறுப்பது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே