1000 ரூபாய் ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்.
பொங்கலை முன்னிட்டு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, வெல்லம் ஆகியவை தலா ஒரு கிலோவும், 2 அடி நீள கரும்பு துண்டு, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் இடம்பெறுகின்றன.
இதற்காக, தமிழக அரசு 2 ஆயிரத்து 363 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வனச்சரகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் 32 உதவிபொறியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 43 இருக்கைகள் கொண்ட வால்வோ சொகுசு பேருந்து வாங்கப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதேபோல, மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் எம்-ஆட்டோக்களையும் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக துபாய் சென்றிருந்தபோது அவரது முன்னிலையில், துபாயின் கேஎம்சி குழுமத்திற்கும், சென்னையை சேர்ந்த எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
100 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் பெட்ரோல் ஆட்டோக்களை மின்சார ஆட்டோக்களாக மாற்றித் தரும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், முதல் கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் 100 எம்-ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் 5 ஆட்டோக்களை முதலமைச்சர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பச்சை நிறத்தில் உள்ள இந்த ஆட்டோக்களை பெண்கள், திருநங்கைகள் மட்டுமே இயக்க உள்ளனர். ஆட்டோவில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி, ஆபத்துக்கு அழைப்பதற்கான பட்டன் ஆகியவை உள்ளன.
ஆட்டோக்களை கிண்டியில் அமைந்த கால்சென்டர் மூலமும் கண்காணிப்பதோடு, அந்த வசதிக்கான இணைப்பு போக்குவரத்து காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. எம்ஆட்டோ பிரைடு (Mauto pride) என்ற ஆப் மூலம் இந்த ஆட்டோக்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த ஆப் மூலம் எம்ஆட்டோக்களை புக் செய்யலாம். இந்த ஆட்டோக்கள் லித்தியம் புரோஸ் பேட்டரியில் இயங்குகின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஆட்டோ பேட்டரியை, வீடுகளில் சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை ஆகும். சென்னையில் சார்ஜிங் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு 45 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் ஆட்டோக்களை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மின்சார ஆட்டோக்களாக மாற்றித் தருவதாகவும், இதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்குவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.