குடியுரிமை சட்ட திருத்த போராட்டம் : டெல்லியில் தொலைதொடர்பு சேவை துண்டிப்பு..!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று காலையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் 1 மணி வரை துண்டிக்கப்பட்டிருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

பெங்களூரு மாநிலம் டவுன்ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல ஹைதராபாத்தின் சார்மினார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மதிய நேரத்தில் தொழுகையில் ஈடுபட்டனர்.

அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பு அளித்தனர்.

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. கால்கள், எஸ்.எம்.எஸ், இணையம் என அனைத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டன.

இதுதொடர்பாக நெட்டீசன்கள், ட்விட்டரில் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பின.

வாடிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த வோடபோன் நிறுவனம், அரசு உத்தரவுப்படி, டெல்லியின் ஜாமியா, சஹீன் பாக், பாவானா, சீலம்புர், ஜாஃப்ராபாத், மண்டி இல்லம் ஆகிய பகுதிகளில் தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன என்று பதிலளித்துள்ளது.

டெல்லியின் முக்கிய பகுதிகளில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு மணி அளிவில் தொலைதொடர்பு சேவை திரும்ப வழங்கப்பட்டன.

போராட்டத்தின் காரணமாக டெல்லி-குர்கிராம் எல்லைப் பகுதியில் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாததன் காரணமாக 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே