மோடி இந்தியாவுக்கு பிரதமரா…? பாகிஸ்தானுக்கு தூதரா…?

சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவுடன், பாகிஸ்தானை எதற்காக ஒப்பிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள், இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு சார்பில் விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கம் மாநிலம் சிலுகுரியில் நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், பிரதமர் மோடி எதற்கெடுத்தாலும், இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுவதாக விமர்சித்தார்.

மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவை, எதற்காக பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டும் என்றும்; மோடி இந்தியாவுக்கு பிரதமரா?? அல்லது பாகிஸ்தானின் தூதரா?? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மோடி நாட்டின் வளர்ச்சி பற்றி பேசாமல், பாகிஸ்தானை பற்றி பேசியே மக்களை குழப்புவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே