தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் மும்மதத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும், அவர்களுடைய பெற்றோரும் இணைந்து சமத்துவ பொங்கலை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாணவ- மாணவிகளின் தப்பாட்டம், பறையிசை, நடனம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மலில் தனியார் பள்ளியில் தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பள்ளி மழலை குழந்தைகள் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

திருப்பூர் – ஆண்டிபாளையம் தெற்குப்பகுதியிலுள்ள முல்லைநகர், தனலட்சுமி நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடுவம்பாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

சென்னையை அடுத்த விநாயகபுரத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் தாவணி அணிந்த பெண்கள் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவில் பெண்களுக்கு சமையல், போட்டி,கோலப்போட்டி, தப்பாட்டம் கரகாட்டம் பொய்க்கால் குதிரைச, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கிராமிய கலைகள் நடைபெற்றன.

திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி மாணவ -மாணவிகள் தமிழ் பண்பாட்டுக் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் வண்ணமயமான ஆடைகளில் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே