பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி முதல் நாள்வாரியாக மொத்தம் 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அண்மையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.
இதற்காக, தற்காலிக பேருந்து நிலையங்கள் இந்த ஆண்டும் அமைக்கப்படும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன், 4,950 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 16,075 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து பிற ஊர்களிலிருந்து 9,995 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
முன்பதிவு தொடங்கியது முதல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.