மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்..!

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து ஆளுநரை நேற்று சந்திக்க முயற்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் அங்கு இழுபறி நீடிக்கிறது. இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் அந்த கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற உள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது.

எனினும் முதல்வர் பதவியைக் கேட்டு முரண்டு பிடித்ததால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.

அடுத்தபடியாக சிவசேனா பின்னர் தேசியவாத காங்கிரசும் ஆளுநர் பகத் சிங் கோசியாரி ஆட்சி அமைக்க அழைத்தார்.

அவர்கள் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை ஆளுநரிடம் முறையாக தாக்கல் செய்யாததால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தர ஒப்புக் கொண்டாலும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி நிபந்தனை விதித்தது.

அதை ஏற்று 3 கட்சித் தலைவர்களும் ஆளுநர் பகத் சிங் கோசியாரியை நேற்று சந்திக்க முடிவெடுத்து இருந்தனர். ஆனால் திடீரென சந்திப்பை கைவிட்டனர்.

அது பின்னடைவாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் வறட்சியை பார்வையிடும் பணியில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் மும்பைக்கு வர முடியவில்லை என்றும் இதனாலேயே சந்திப்பு கைவிடப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்று கட்சியினரும் ஆளுநரை திங்கட்கிழமை சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது பாஜக குதிரை பேரம் நடத்துவதற்கான அவகாசம் என சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கை விமர்சித்துள்ளது.

இதனுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் மும்பையில் கட்சித் தலைவர் சரத்பவார் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.

இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே