BREAKING NEWS : டெல்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு..!!

போராட்டம் நடப்பதை தடுக்க டெல்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

வடகிழக்கில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

அதைத்தொடர்ந்து டெல்லி ஜாமியா மிலியா, இஸ்லாமியா பல்கலைக் கழகம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறைகள் அரங்கேறின.

அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்தினர்.

மேலும் ஜாமியா பல்கலை-யில் அத்துமீறி நுழைந்த டெல்லி போலீசார், மாணவர்களை கொடூரமாக அடித்து விரட்டியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியை தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அந்த வகையில், டெல்லியில் லால்குயிலா பகுதி முதல் ஷாகீத் பகத் சிங் பூங்கா வரை இன்று காலை 11.30 மணிக்கு பேரணி செல்ல டெல்லி காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த பேரணியானது ஹம் பாரத் கே லோக் என்ற தலைப்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பேரணியை நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் பேரணியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி செங்கோட்டை பகுதியில், டெல்லி போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

லாகோரி கேட், காஷ்மீர் கேட் மற்றும் கோட்வாலி காவல் நிலையங்களும் இந்த உத்தரவின் கீழ் வரும் என டெல்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜசோலா விஹார், ஷாஹீன் பாக், முனீர்கா, லால்குயிலா, ஜமா மஸ்ஜித், சாந்தினி சௌக் மற்றும் விஷ்வவித்யாலாயா ஆகிய மெட்ரோ ரயில் நிலைங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே