2ம் கட்டத் தேர்தல் வாக்கினை பதிவு செய்து வரும் அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பலர் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

கோவையிலுள்ள தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தமது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாட்டில் மிகவும் முக்கியமானது பஞ்சாயத்து தேர்தல் தான் என்றார். மேலும் கட்சி மதம் சாதி வேறுபாடின்றி யாரு பொறுப்பாக கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்குமாறு அறிவுறுத்தினார்.

சிதம்பரம் அருகிலுள்ள சிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் பேசியவர், தங்களது கருத்தை கோலமிட்டு வெளிப்படுத்தியவர்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும்; தமது வீட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு உள்ளதாகவும் முடிந்தால் தம்மை கைது செய்யட்டும் என்றும் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் தமது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் பேசிய அவர் நாடாளுமன்றதேர்தல் போல உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக, அதிமுகவுக்கு எதிரான அலை வீசுவதாக கூறினார்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளர் பள்ளியில் ஆண்டிபட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு பதிவு செய்தார்.

அவர் அங்கு வந்தபோது வாக்குச்சாவடியில் மின்சாரம் தடைபட்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களிடமிருந்து டார்ச்லைட் வாங்கி அந்த வெளிச்சத்தில் தமது வாக்கினை பதிவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே