தன்னார்வலருக்கு தடை!!! தமிழக அரசு அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது.

அதனால் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் விதமாக அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசின் செய்தித் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் துன்ப துயரத்தை அனுபவித்து வரும் ஏழை – எளிய மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்குவது தவறு என்றும், மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன்; தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பதுதான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?

தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவது தவறாக இருக்கலாம். அப்படி கூட்டம் சேர்வதை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தலாம்.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே செய்யக்கூடாது, உணவுப் பொருள் தரக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?

கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது;

இது ஜனநாயக நாடு; யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்!

‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’ என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே