மீலாது நபி திருநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!!

இன்று மீலாது நபி திருநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்ததினமான மிலாது நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, இஸ்லாமிய பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 2,895 பள்ளிவாசல்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது, இஸ்லாமிய பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மனிதநேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த மிலாதுநபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்: அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் தி.மு.க.வுக்கு இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த மிலாதுநபி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே