மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். 

இதையடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, நேற்று மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இது ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் வழக்கறிஞரிடம் மசோதா குறித்து கருத்து கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான பதில் தற்போதுதான் கிடைத்தது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் மருத்துவப் படிப்புக்காக கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, இந்த மசோதா குறித்து கருத்து கேட்க, கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று (அக். 29) பதில் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே