கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தியது பிசிசிஐ..!!

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் இருந்ததையடுத்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரஞ்சிக் கோப்பையை நம்பி இருந்த ஏராளமான வீரர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் பெரும் நிதிச் சிக்கலில் வாடினர்.

இதையடுத்து, கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத வீரர்களுக்கு நிதியுதவியும், அடுத்த சீசனுக்கான ஊதிய உயர்வையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், ‘கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் இழப்பீடாக 2020-21ஆம் ஆண்டு சீசனில் வழங்கப்படும். வரும் சீசனுக்கும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

வீரர்களுக்கு இழப்பீடு வழங்குதல், போட்டி ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் ஆகிய பரிந்துரைகளை பிசிசிஐ அமைத்த உயர்மட்டக் குழு வழங்கியது. இந்தப் பரிந்துரை மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர்கள் பயன்பெறுவார்கள்.

இதன்படி, 40 ரஞ்சிப் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு இரு மடங்காக ரூ.60 ஆயிரமும், முதல் தரப் போட்டியில் ரூ.2.50 லட்சமும் வழங்கப்படும்.

21 போட்டிகள் முதல் 40 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம், ஊதிய உயர்வாக போட்டி நடக்கும் நாளில் ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும்.

23 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.25 ஆயிரமும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முதல்தர ப்ளேயிங் லெவன் வீரர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.35 ஆயிரமும், முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடும் வீரர்களுக்குப் போட்டி ஒன்றுக்கு ரூ.17,500 வழங்கப்படும்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதியம் போட்டி ஒன்றுக்கு ரூ.12,500லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே