பெண்ணை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பெண்ணை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலாடி அருகே உள்ள சிரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா. இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்கல் பகுதியில் சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுந்தர்ராஜ் மற்றும் ஆமூஸ் ஆகியோர், அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சரோஜா இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சரோஜாவை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல்துறையினர் வந்து குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே