திருச்சி நகைக் கடை கொள்ளையின் முக்கிய குற்றவாளியான முருகன் சரண்| பின்னணி என்ன?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையின் சுவற்றில் துளை இட்டு கடந்த 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

முகமூடி அணிந்த நபர்கள் அரங்கேற்றிய இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முருகனின் கூட்டாளி மணிகண்டன் என்பவர் திருவாரூர் அருகே கடந்த நான்காம் தேதி 5 கிலோ தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டார்.

அப்போது உடன் இருந்த சுரேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கில் சுரேஷின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகனை ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் கர்நாடக மாநிலம் பகளவாடி பகுதியில், 2015ஆம் ஆண்டு ஒரு வீட்டில் 4 கோடி ரூபாய் முருகன் கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அம்மாநில போலீசார், திருவாரூரில் பதுங்கியிருந்த முருகன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்த முருகன் உள்ளிட்டோர் தலைமறைவானதுடன் அதன் பின்பு பெங்களூர் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்திற்கு பின்பு முருகன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து டி.ஐ.ஜி ஹரி சேகரன் உத்தரவின் பேரில் முருகனை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக போலீசாரின் நெருக்கடிகளால் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்ற காவலில் உள்ள முருகனை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே