பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடம் பேச உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1024 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் நாட்டு மக்களிடம் சமூக தொற்றாக மாறுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி மூலம் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் மத்திய அரசு இந்த லாக் டவுன் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோவில் “மனதின் குரல்” (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களிடம் பேசுவது வழக்கம்.
அன்றைய மாதத்தில் நாட்டில் நடந்த முக்கிய மாற்றங்கள், நல்ல விஷயங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார்.
அத்துடன் மக்கள் எந்தநெந்த விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசுவார்.
அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேச உள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்க மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச உள்ளது குறித்தும், தனது உரையில் கொரோனா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி இரண்டு முறை கடந்த சில நாட்களில் நாட்டு மக்களிடம் பேசி உள்ளார்.
22ம் தேதி மக்கள் ஊரடங்கு நடைபெற வேண்டும் என கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி பேசினார்.
அதன்பிறகு 24ம் தேதி மீண்டும் நாட்டு மக்களிடம் பேசினார்.
அப்போது 21 நாட்கள் ஊரடங்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார்.
எனவே இன்று என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.