பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் உலகின் முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது கணவர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதேபோன்று ஈரானின் முதல் துணை அதிபர் இஷ்ஹாக் ஜஹாங்கிரி மற்றும் துணை சுகாதாரத்துறை அமைச்சர் ஐராஜ் ஹரிர்ச்சி ஆகியோரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர்.
அமெரிக்காவின் மியாமி மாகாண மேயர் பிரான்சிஸ் செளரேஸும் கொரொனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் பாலிவுட் நடிகை கனிகா கபூருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டது.
லண்டனில் இருந்து திரும்பிய அவர் லக்னோவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை.
இதேபோல், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நடினி டோரீஸும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிர்ப்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் பிரதமரையும் தொற்றியிருக்கும் விவகாரம் இங்கிலாந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று பிரபல கால்பந்து வீரர்கள், சமையல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.