நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு : வெறிச்சோடிக் காணப்படும் சாலைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்

மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவும் 9 மணி வரை வீட்டில் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று மக்கள் ஊரடங்கு சென்னையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று காலைமுதலே ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்டு பரவத் தொடங்கியது.

ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

ஆனால், சீனாவில் தானே வந்துள்ளது நமக்கென்ன என்று உலக நாடுகள் பலவும் அலட்சியமாகச் செயல்பட்டன.

முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகள், ஈரான், மேற்காசிய நாடுகளுக்கு வேகமாகப் பரவியது.

அமெரிக்காவையும் அது விட்டு வைக்கவில்லை. தாமதமாக விழித்துக்கொண்ட நாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வை அளித்தபோதும் தனிமைப்படுத்துதலை அலட்சியப்படுத்திய மக்களால் இன்னும் வேகமாகப் பரவியது.

இதன் விளைவு கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின.

இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம், இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது.

இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன.

இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றன.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

பிரதமர் மோடி இன்று ஒருநாள், மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்று இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் ஊரடங்கை சென்னை மக்கள் இன்று கடைப்பிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதலே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சென்னையில் தேன்கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போல் எப்போதும் கூட்டமாக காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மெரினா கடற்கரை, பாரிமுனை, பூக்கடை, எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சாலை, தி.நகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் யுத்தகளம் போல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பொதுவாக சட்டம்-ஒழுங்கைக் காக்கவே ஊரடங்கு உத்தரவு போடப்படும். முதன்முறையாக சமுதாயத்தைக் காக்க சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிரது.

உத்தரவாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும். ஆனால், வேண்டுகோளாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 130 கோடி மக்களால் கடைப்பிடிக்கப்படுவது இன்றுதான்.

ஊரடங்கு உத்தரவை கலவரக்காரர்கள் மீறுவது வழக்கம். ஆனால் மக்கள் ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று மக்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதை தேசம் முதன் முறையாகப் பார்க்கிறது.

சென்னையிலும் அதன் வீச்சைக் காண முடிந்தது.

இதற்குமுன் பல நிகழ்வுகளை சென்னை சந்தித்துள்ளது, ஆனாலும் இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல் முறை.

2015-ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட ஓரிரு நாளில் போக்குவரத்து இன்றி சென்னை சாலைகள் வெறிச்சோடின.

அதேபோன்று வர்தா புயலால் சாலையெங்கும் மரங்களும், பிளக்ஸ் போர்டுகளும், அறிவிப்புப் பலகைகளும் வீழ்ந்ததால் ஒரு நாள் முழுவதும் பல இடங்களில் ஸ்தம்பித்தன.

அதற்குப் பிறகு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் இன்று சென்னை முழுவதும் வெறுமையின் பரவல் நீடிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே