தேசியவாத காங்கிரஸ், பிஜூ ஜனதா தளத்துக்கு மோடி பாராட்டு

நாடாளுமன்ற விதிகளை தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் சிறந்த முறையில் பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை திடீரென பிரதமர் மோடி புகழ்ந்து இருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மாநிலங்களவையில் 250 ஆவது கூட்டத் தொடர் அமைந்துள்ளது.

இதையொட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பல்வேறு வரலாற்று பூர்வ நிகழ்வுகளை மாநிலங்களவை கண்டுள்ளதாக கூறினார்.

மாநிலங்களவை என்பது அழியாதது என்றும் இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் ஆன்மாவாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முத்தலாக் தடை மசோதா, ஜிஎஸ்டி, 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் தொடர்பான மசோதாக்கள் என முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை மாநிலங்களவை நிறைவேற்றி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தில் சரி பார்ப்பதற்கும் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களவை அவசியமானது என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் சரிபார்ப்பதற்கும், தடை ஏற்படுத்துவதற்கும் வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் விரிவாகவும் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

அதேநேரத்தில் பணிகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் நாடாளுமன்ற விதிகளை சிறந்த முறையில் பின்பற்றுவதாகவும், அவையின் மையப்பகுதிக்குள் வந்து பிரச்சனை ஏற்படுத்தாமல் தங்களது கருத்துக்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தான் உள்பட மற்ற அனைத்து கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மகாராஷ்டிராவில் கிங் மேக்கராக தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியை பிரதமர் மோடியை புகழ்ந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே