வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக வன்னியர் சமுதாய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டியதோடு, அவர்கள் கல்வியில் முன்னேற பாடுபட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சமூக மக்கள் நடத்திய போராட்டங்களை அதிமுகவினர் எள்ளி நகையாடியதை குற்றம்சாட்டியுள்ளார்.
எட்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா?? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.