சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்த்தெறிய முடியாது – பிரதமர் மோடி ட்வீட்..!!

சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் 306 இடங்களிலும், அதிபர் ட்ரம்ப் 232 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் தேர்தல் சபை உறுப்பினர்கள், தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ஆம் தேதி செலுத்தினர்.

தேர்தல் சபை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணும் பணி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது. வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ட்ரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சிறிதுநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

அமெரிக்க அதிபராக பைடனை அங்கீகரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

இதில் பெண் ஒருவரும் பலியானார். 6 மணி நேரத்துக்கு பின் போராட்டம் கட்டுக்குள் வந்ததையடுத்து பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் வேதனை அளிக்கிறது. அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே