திரையரங்குகளில் 100% அனுமதி – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு..!!

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் கடந்த அக்டோபர் மாதம் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

இருப்பினும் சொல்லும் அளவிற்கு புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதே சமயம் கொரோனா அச்சத்தால் மக்களும் தியேட்டருக்கு வராமல் போனது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோர் வேண்டுகோள் விடுத்த நிலையில் தமிழகத்தில் 100% ரசிகர்கள் அனுமதியுடன் தியேட்டர்கள் செயல்பட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காரணம் தியேட்டர்களில் மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா தலைதூக்கும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக முத்துக்குமார், ராம்குமார் ஆதித்யன் என்பவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் வழக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே