உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
அதில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோரும் கட்சி உறுப்பினர்கள், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் சம்பந்தப்பட்ட மாவட்ட தலைநகரங்களில், விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
விருப்ப மனுக்களை பெறுவதற்காக, கட்சி மாவட்டங்கள் வாரியாக, அதிமுக நிர்வாகிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விருப்ப மனுக்களைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பெறும் விண்ணப் படிவங்களுக்கான கட்டணங்களையும், பதவிகள் வாரியாக அதிமுக அறிவித்திருக்கிறது.
மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறவர் 25 ஆயிரம் ரூபாய், நகராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறவர் 10 ஆயிரம் ரூபாய் என ஒவ்வொரு உள்ளாட்சி பதவிகளுக்கும், கட்டணத் தொகையை நிர்ணயம் செய்து, அதிமுக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.