ரஜினிக்கு பால்கே விருது 100% பொருத்தம்: கமல் வாழ்த்து

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே