கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது அப்பகுதி மக்கள் மறித்து, தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக ஏராளமானோர் மீது டி.பி.சத்திரம், அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தனது கணவர்உடலை தோண்டி எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மருத்துவரின் மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் மனு அளித்தார். அதை மாநகராட்சி ஆணையர் கடந்த மே 2-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார்.

இதனால், இதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஅப்துல் குத்தூஸ், ‘‘கரோனாவால்உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடுமயானத்தில் இருந்து தோண்டிஎடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அவரது மனைவி,குடும்பத்தினர் முன்னிலையில், கிறிஸ்தவ சம்பிரதாயங்களைப் பின்பற்றி மறுஅடக்கம் செய்யவேண்டும். கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே