அதிமுக ஆட்சியில் கோவையில் முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு விபத்துகள் குறைப்பு: பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

நான் அமைச்சராக பொறுப்பேற்றபின் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குனியமுத்தூர், மைல்கல் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது மைல்கல் பகுதியில் கட்சி தொண்டர்களுடன் இணைந்து அவர் ஒயிலாட்டம் ஆடினார். குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவர் பேசியதாவது:

நான் என்றைக்கும் உங்கள் சகோதரன். உங்களுக்காக இந்தப் பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பாலக்காடு பிரதான சாலையே இதற்கு சாட்சி. பாலக்காடு பிரதான சாலை முன்பு எப்படி இருந்தது என உங்களுக்குத் தெரியும். நான் அமைச்சராக பொறுப்பேற்றபின் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, விபத்துகள் 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. விமானநிலைய விரிவாக்கம் நீண்ட கால பிரச்சினையாக இருந்தது. அந்தப் பணிகளை தொடங்கிவிட்டோம். பணிகள் நிறைவடையும்போது நிறைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.) இங்கு வந்துவிடும். மேலும், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி பூங்காவும் அமைய உள்ளது. இதனால், ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் பல்வேறு பணிகளைச் செய்துள்ளோம். கரோனா காலத்தில் திமுக மக்களவை உறுப்பினர் ஆறுதல் சொல்லக்கூட இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நான் பணியாற்றியுள்ளேன். ஊரடங்கு காலத்தில் 23 வகை பொருட்களை பேக் செய்து, பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வழங்கினோம். உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு அளித்தோம்.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய மாவட்டத்தில் எந்த கலவரமும் ஏற்படவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதை திமுகவினர் குறை கூறி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் பல்வேறு சலுகைகளை பெற்றது திமுகதான். திமுக பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்கிறது. எந்த சூழ்நிலையிலும் சிறுபான்மையினர் உரிமைகள் காப்பாற்றப்படும்.

சிறுபான்மையினருக்கு துரோகம் இழைத்து வருவது திமுக. நம் தொகுதியை பொறுத்தவரை நாம் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. இந்த தொகுதியில் பலர் திமுகவில் இருந்தாலும் காங்கேயத்தில் இருந்து ஒருவரை அழைத்துவந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின்னர் சென்றுவிடுவார். நாங்கள் இங்கு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே