பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது மத்திய அரசு தடை விதித்து உள்ள நிலையில் இதை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள்.

இதனை கண்டித்து அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

8 மாநிலங்கள்

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

மத்திய அரசு தடை

இந்த சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நேற்றி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

பி.எஃப்.ஐக்கு தடை

இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பி.எஃப்.ஐ. அறிவிப்பு

இந்த நிலையில் தமிழ்நாடு பி.எஃப்.ஐ. தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தனது பேஸ்புக் பக்கத்தில், “மத்திய அரசின் தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்காெள்வாேம். மத்திய அரசு ஜனநாயக அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்ததாக அறிவித்துள்ளது. இந்த தடை அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இதையாெட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த எல்லாச் செயல்பாடுகளும் நிறுத்திக் காெள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அரசாணை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதித்த தடையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கும் இந்த அரசாணை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே