தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை ஜிஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” விடியலை தருவோம் என்று சொல்லி முதலமைச்சரான திரு.ஸ்டாலின் ஏற்கனவே 20211ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மாவின் அரசு வழங்கிய பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கூட வழங்காதது ஏழை எளிய நடுத்தர மக்களை கடும் கோபத்துக்குள்ளாகி உள்ளது. தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த திமுகவின் மக்களவை தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு , பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அவ்வாறு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் குறைந்தது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும் பொது மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார். இதனால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும்.
அப்போது டி.ஆர்.பாலு பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் என்று கேட்டதற்கு தனிமனிதன் கருத்து எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று டி ஆர் பாலு பதிலளித்துள்ளார். டி.ஆர். பாலுவை பேட்டி கண்ட நெறியாளர், தியாகராஜன் மாநில நிதியமைச்சர் ஆயிற்றே என்று கேட்டதற்கு, நான் திமுக கட்சி பொருளாளர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது திமுக கட்சியின் தலைவர் ஆணைப்படி தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியும் நான்தான் எழுதினேன் என்று தெளிவாக பேட்டி அளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை பேசியுள்ளார். மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டினை கேட்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் ,மேற்கு வங்க அரசு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய அரசு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும், ஊடகங்களிலும் ,நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.
திமுகவின் பொருளாளரும், மூத்த தலைவருமான டிஆர் பாலுவை பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில் , தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது? என்பதை விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.