தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒமைக்ரான் கரோனா பரவலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.
அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள், பொது இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், டி.ஜே. இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக காவல்துறை தலைவர் இன்று வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே புத்தாண்டை வரவேற்று கொண்டாடுங்கள்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
டிசம்பர் 31ஆம் தேதி வெளியூர் செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில் அல்லது பேருந்துகளில் பயணிக்கலாம். கார்களில் செல்பவர்கள் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஓய்வெடுத்து பயணத்தை தொடருங்கள்.
வெளியூர் செல்பவர்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.