ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு கடந்த 16-ந்தேதி அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதுபோன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு அடையும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவது மட்டுமின்றி விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே