தஞ்சை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களையும், சந்தித்தவர்களையும் மாவட்ட நிர்வாகம் கடந்த மாத இறுதிக்குள் கண்டறிந்து பரிசோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இப்பெண்ணின் தந்தை டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர். இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
ஆனால் மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு இவரை சந்தித்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பரிசோதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த இவருடைய மருமகள் மற்றும் இவரை பார்க்க வந்த மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.
மருமகளுக்கு கடந்த 7-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவரின் மற்றொரு மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர் கடந்த மாதம் கர்ப்பிணியாக இருந்த தனது நார்த்தனாரை பார்க்க வந்ததாகவும், அதன் மூலம் இவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.